Thursday, 15 October 2020

Neeti Satakam - Tamil Meaning

 


1.
இறை வணக்கம்
திசை, காலத்தின் கட்டுகளுக்குள் அடங்கா, எல்லையற்ற, சின்மாத்திர உருவே! தன்னால் மட்டுமே அறியப்படுமோர் அளவே! சாந்தமான ஒளியே! வணங்கினேன்.

(திசை - space; சின்மாத்திர - pure consciousness; அளவு - measure; சாந்தமான ஒளி - light that is beyond darkness and heat-cold combine)

தன்னால் மட்டுமே – இங்கு சீவான்மா, தான் யார் என்பதை உணர்வதனைக் குறிக்கும். இது அறிவுக்கு அப்பாற்பட்ட சின்மாத்திர நிலை. 

2.
மொழியாக்கம் செய்யப்படவில்லை.

3.
அறிவிலியை எளிதில் இணங்கச்செய்யலாம்; அறிவாளியை இணங்கச்செய்தலும் எளிதே; ஆயின், சிற்றறிவாகினும், தற்பெருமை கொண்டவனை, பிரமனாலும் மகிழ்விக்கக் கூடுமோ?

4.
சுறா வாயின் கூரிய பற்களினின்றும் மணியை வலியப் பிடுங்கிடக் கூடலாம்; பேரலைகள் கொந்தளிக்கும் கடலினையும் கடந்திடக் கூடலாம்;
சினம் கொண்ட நாகத்தினையும் மலரெனத் தலையில் சூடிடக் கூடலாம்; ஆயின், பிடிவாதமான முட்டாளின் உள்ளத்தினை நிறைவு செய்யக் கூடுமோ?
( மணி - precious stone)

5.
முனைந்து, மணலினின்றும் எண்ணை பிழிந்திடக் கூடலாம்;
பெருந் தாகம் கொண்டவன், கானலினின்றும் நீர் பருகிடக் கூடலாம்;
தேடியலைந்து, ஓர்கால் முயற் கொம்பினைக் கண்டிடக்கூடலாம்; ஆயின்
பிடிவாதமான முட்டாளின் உள்ளத்தினை நிறைவு செய்யக் கூடுமோ?

6.
மதகளிற்றினை, தாமரையின் இளந்தண்டினால், கட்டுதற்கொப்பாகும்;
தொட்டாற்சிணுங்கி மலர் நுனியினால், வைரத்தினை இழைப்பதற்கொப்பாகும்; ஓர் துளித் தேன்கொண்டு, உப்புக் கடலினை, இனிப்பூட்டுதற்கொப்பாகும் – நல்லோரின் தேனொழுகும் சொற்களினால், தீயவழி செல்வோனை, நல்வழிப்படுத்த முனைவோன் செயலே.

7.
கல்லாதவனின் அறியாமையினுக்கு ஒரே திரை, குறிப்பாக, சான்றோர் அவைதனில், மௌனம் சாதித்தலொன்றேயெனப் படைத்தவன் படைத்திட்டானே.

(திரை - மௌனமெனும் திரை – தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தாதிருக்க)

8.
சிறிதே அறிந்திருந்த வேளை, மதகளிறென, இறுமாப்பினால் குருடனாயிருந்தேன்; யாவும் அறிவோமென, எனதுள்ளம் பெருமிதமுற்றிருந்தது; மெய்யறிஞர்தம் தொடர்பினால், சிறுகச் சிறுக, அறிந்தபின்னர், எத்தகை மூடனாயிருந்தேனென, வெப்பச் செருக்கு முற்றும் தணியப்பெற்றேனே.


9.
வெறுக்கத்தக்க, புழுக்கள் நிறை, துர்நாற்றமடிக்கும், இறைச்சியற்ற மனித எலும்பினை, எச்சிலொழுக, உவகையோடு, பெருஞ்சுவையெனத் தின்னும் நாய், அருகில் தேவேந்திரனே நின்றிருந்தாலும், திரும்பிப் பார்க்க விழையாது; அங்ஙனமே, மிக்கிழிந்தவன், தனது உடைமைகளின் மதிப்பின்மையை அறியமாட்டான்.


10.
கங்கை, வானுலகினின்று, சிவனின் தலையிலும், பசுபதியின் தலையினின்று, இமய மலையிலும், உயர் இமய மலையினின்று, தரையிலும், தரையினின்று கடலையும் அடைந்து, உயர் நிலையினின்று மிக்கு தாழ்நிலையை அடைகின்றது; அங்ஙனே, பகுத்தறிவிழந்தவனை, அழிவு பல்வகையிலும் முந்திக்கொள்ளுமன்றோ.

 

கங்கை சிவனின் தலையில் வீழ்ந்து, சிவனை அடித்துச் சென்றுவிடலாமென கருவம் கொண்டதாக கூறப்படும். அதனால் இந்த உவமை.

பசுபதி - சிவன்


11.
நெருப்பினை நீராலும், சூரிய வெப்பத்தைக் குடையினாலும், யானையை கூரிய அங்குசத்தினாலும், சீரும் காளையையும், கழுதையையும், தடியினாலும், நோயினை பல்வகையான மருந்துகளாலும், நச்சினை பலவித மந்திரங்களுரைத்தும், வெல்ல இயலும்; யாவற்றிற்கும், சாத்திரங்கள் விதித்த மருந்துண்டு; மருந்தில்லை, முட்டாளுக்கே.


12.
இயல், இசை, நாடகம் மற்றும் கலைகளற்றவன்,  கொம்பும், வாலுமற்ற வெறும் மிருகமே; அவன் புல்லைப் புசிக்காமலிருத்தலொன்றே மிருகங்கள் செய்திட்ட பெரும் பேறாகுமன்றோ!

 
13.
கல்வி, தவம், கொடை, ஞானம், நன்னடத்தை, நற்பண்பு, அறம் இவையற்றோர் எவரோ, அவர் மனிதருலகில், புவிக்குச் சுமையென, மானிட உருவில் திரியும் மிருகங்களே.

 

ஞானம் - தன்னையறிதல்


14.
செல்லவொண்ணா மலைப்பகுதியில் காட்டு மக்களுடன் திரிவது மேலாமே, இந்திர பவனங்களில் முட்டாட்களோடு தொடர்பு கொள்வதினும்.

15.

எந்த புகழ்பெற்ற புலவனின் மொழி, சாத்திரங்களால் அலங்கரிப்பட்ட இனீய சொற்களோடு கூடிய, மாணாக்கர்களுக்கு வழங்கத்தக்க, புனித நூல்களோ, அத்தகையோன், வறியோனாக எந்த அரசனின் ஆட்சியில் வாழ்கின்றானோ, அது அந்த அரசனின் முட்டாள்தனத்தைக் காட்டும் . புலவர்கள் செல்வமற்றோராயினும், மேலோரே.  வைரத்தின் தரமறியத் தெரியாமற்போனால் அது  ஆய்வாளன் குற்றமே, மணியினுடையதல்ல.

 

16.

கள்வரால் கவரப்பட இயலாதது, எவ்வமயமும் விவரிக்க இயலா களிப்பருள்வது, வேண்டுவோருக்களித்தால் எல்லையின்றிப் பெருகுவது, உலகின் முடிவினிலும் அழியாதது, கல்வியெனும் பெருஞ்செல்வமே.

மன்னா! அச்செல்வம் பெற்றவரிடம் நீ செருக்கடையாதே. அவருக்கீடேது?

17.

மெய்யறிவு அடையப்பெற்ற அறிஞர்களை அவமதிக்காதே. புல்லைப்போன்று மதிப்பற்றது செல்வம், அவர் குறுக்கே நிற்காது. மதம் ஒழுகும் கருத்த நெற்றிக்குழி கொண்ட களிற்றினுக்கு, தாமரைத் தண்டுதான் குறுக்கிடுமோ?

18.

பிரமனும், அன்னத்தின் மீது, மிக்கு கோபம் கொண்டால், அது நீரில், தாமரையிலைப் படுக்கையில் வாழும் வசதியைத்தான் பறிக்க இயலும். ஆனால், நீரினின்றும் பாலைப் பிரிக்கும், உலகப் புகழ்பெற்ற, அன்னத்தின் திறமையை பறிக்க இயலாது. 

 

அரசன் புலவரிடம் கோபம் கொண்டால், அவர் வசதிகளைப் பறிக்கலாம். ஆனால், அவர் புலமையை ஒன்றும் செய்ய இயலாது என்பது உவமானத்தினால் விளக்கப்படுகின்றது.


19.

கேயூரம் மனிதனை அலங்கரிப்பதில்லை, நிலவினைப் போன்று ஒளிரும் மாலையுமல்ல. குளியலுமல்ல, உடல் பூச்சுகளுமல்ல, பூக்களுமல்ல,  தலை அலங்காரமும் அல்ல. பண்பட்ட சொற்கள் மட்டுமே அவனை அலங்கரிக்கும். அணிகலன்கள் நாள்பட, பழுதடையுமன்றோ. சொல் அணிகலன் ஒன்றே அணிகலனாமே.

 

கேயூரம் – தோளணிகலன் - தோள்வளை

 

20.

கல்வி, மனிதனின் உருவத்தினும் மேலானது. அது ஒளித்துக் காக்கப்படும் செல்வம். கல்வி இன்பங்கள் அருள்வது, பெயர் மற்றும் மகிழ்ச்சி அருள்வது. கல்வி தலை சிறந்த்து. கல்வி வெளி நாடு செல்கையில் உறவினராம். கல்வி உயர்ந்த தெய்வமாம். மன்னர்களால் தொழப்படுவது கல்வியே, செல்வமல்ல. கல்வியற்றவன் மிருகமே.

ஒளித்துக் காக்கப்படுவது – கல்வி வெளிப்படையாக காட்டப்படுவதன்று

21.

பொறுமை உண்டாகில், (வேறு) கவசம் எதற்கு? மனிதனுக்கு சினமுண்டாகில், வேறு எதிரி எதற்கு? நெருங்கிய சுற்றமுண்டாகில், நெருப்பு எதற்கு? நட்புண்டாகில், தெய்வ மூலிகைகள் எதற்கு? தீயோர் உண்டாகில், பாம்பு எதற்கு? குற்றமற்ற கல்வியுண்டாகில், செல்வம் எதற்கு? அடக்கம் உண்டாகில், அணிகலன் எதற்கு? நற்கவிதையுண்டாகில், அரசாண்மையும் எதற்கு?

 

நெருப்பு எதற்கு – சுற்றமே நெருப்பூட்டுமென

மூலிகைகள் எதற்கு – நட்பே நலமுண்டாக்குமென

 

22.

சுற்றத்தாரோடு அன்பு, மற்றவரோடு கருணை, தீயவரோடு தந்திரம், நல்லவரோடு நட்பு, அரசினரோடு நயம், கற்றவரோடு நாணயம், பகைவரோடு வீரம், மூத்தவரோடு பொறுமை, பெண்களோடு சாமர்த்தியம் – இத்தகைய பண்புகளில் தேர்ந்த மக்களால்தான் உலகம் நிலைக்கின்றது.

 

23.

அறிவீனத்தைப் போக்கும், வாய்மையினை வளர்க்கும், மேன்மையினைக் கொடுக்கும், பாவத்தினைக் களையும், நல்ல உள்ளத்தைத் தரும், நாற்றிசையிலும் புகழ் பரவச் செய்யும் – நல்லோரிணக்கம் மனிதருக்கு என்ன செய்யாது, சொல்.  

 

24.

வெல்வரே, (ஒன்பது) சுவைகளில் தேர்ந்த, அந்தச் சிறந்த கவியரசர்கள். இல்லை அச்சம், அவர்தம் புகழுடம்புக்கு, முதுமை, சாவினால்.

 

ஒன்பது காவியச்சுவைகள் – சிங்காரம், வீரம், கருணை, வியப்பு, நகை, அச்சம், இழிப்பு, கோபம், அமைதி.  (தாயன்பு பத்தாவது சுவையென்பர்)

 

25.

நன்னடத்தையுள்ள மகன், ஒழுக்கமும் அன்புமுடைய மனைவி, கொடைவள்ளலென எசமான், பிரியமான நண்பன், வஞ்சனை செய்யாத பணியாளர், சிறிதும் கவலையற்ற  இலேசான மனம், இனிய உருவம், நிலையான செல்வம், கல்வியினால் ஒளிரும் முகம் – இவை யாவற்றையும் மனிதன் அடையப்பெறலாமே, பல்லுலகினையும் காத்து, வேண்டியதருளும் அரியைத் தொழுதால்.

 

26.

உயிர்களைக் கொல்லாமை, பிறர் செல்வத்தினைப் பறிக்காத கட்டுப்பாடு, உண்மையான சொல், தக்கவமயத்தில், இயன்றளவு கொடை, பிறன்மனை குறித்துப் பேசாமை, பேராசை கொள்ளாமை, மூத்தோரிடம் பணிவு, அனைத்துயிர்களிடமும் கருணை – இவை யாவும், மேன்மையடைய, அனைத்து நூல்களிலும் பொதுவாக உரைக்கப்பெற்ற, தவறாத விதிகளாம்.   

 

27.

இடைஞ்சல்களுக்கு அஞ்சி எதனையும் தொடங்கவே மாட்டார், கீழோர். தொடங்கிய பின், இடைஞ்சல்களைக் கண்டு நிறுத்திடுவர் சாதாரணமானோர். இடைஞ்சல்கள் திரும்பத் திரும்ப நேர்ந்தாலும், தொடங்கியதைக் கைவிட மாட்டார் மேலோர்.

 

28.

இனியதும், நேர்மையுமான நடத்தை, உயிருக்கு இடர் நேரினும், பாவம் செய்யாதிருத்தல், தீயோரிடம் பணியாமை, நண்பனாகிலும், வறியவனிடம் இரவாமை, பெருந்துயர் நேரினும் நிலையாயிருத்தல், உத்தமர்களின் வழி நடத்தல் – இத்தகைய, வாள்முனை விரதம் போன்ற கடினமான நெறிமுறைகளை, நல்லோருக்கு யார் பகன்றனர்?

 

வாள்முனை விரதம் – வாள்முனையில் உறங்குவது போன்ற விரதம்

 

29.

பட்டினியால் வாடினாலும், முதுமையினால் மெலிந்து, நலிந்தாலும், துன்ப நிலை நேர்ந்தாலும், வலிமையும் பொலிவும் குன்றினாலும், உயிர் பிரிவதாயிருந்தாலும், உலர்ந்த புல்லினை விரும்புமோ, மதக்களிற்றின் நொறுங்கிய மண்டைக் கவளத்திலேயே குறியாகவுள்ள, பெருமை மிக்கோரில் தலையாய சிங்கம்?

 

30.

இறைச்சியற்ற, தசையும் வசையும் சிறிதே ஒட்டிக்கொண்டிருக்கும், தூசு படிந்த, எலும்புத் துண்டினையும் அடைந்த நாய், தன்னுடைய பசியினை அது போக்க முடியாதாகிலும், அதனால் மகிழ்வடைகின்றது. சிங்கமோ, தனது பிடியலகப்பட்ட நரியை விடுத்து, யானையைக் கொல்லும். அனைவரும், துன்பம் நேரிடினும், தங்கள் இயற்கைக்கேற்பவே பயனை விரும்புவர்.

 

31.

நாய், உணவளிப்போனிடம், வாலை ஆட்டிக்கொண்டு, அவன் கால்களில் கீழே வீழ்ந்து, தொண்டையைக் காட்டிக்கொண்டு, தரையில் புரளும். ஆனால், துங்கக் களிறோ, (உணவளிப்போனை) அமைதியாக  நோக்கி, (அவன்) நூறு தடவை வேண்டிய பின்னரே உண்ணும்.

 

உணவளிப்போன் - எசமான்

 

32.

சுழலும் வாழ்க்கையில், யார் இறப்பதில்லை, பிறப்பதில்லை? எவன் பிறப்பினால் (அவனுடைய) மரபு உயர்வடைகின்றதோ, அவனே (உண்மையில்) பிறக்கின்றான்.

 

யார் இறப்பதில்லை, பிறப்பதில்லை -  பிறப்பவர் யாவரும் மரிப்பர். மரித்தவர் மீண்டும் பிறப்பரென.

 

33.

மேன்மக்களுக்கு, மலர்க்கொத்தினைப் போன்று, இரண்டே போக்காம் – யாவர் தலையையும் அலங்கரித்தல், அன்றேல் காட்டில் வாடிப்போதல்.

 

மேன்மக்கள், மலர்களைப் போன்று அடிபணிந்திருக்க மாட்டாரென.

 

34.

சகோதரா! வியாழன் முதலாக, மற்ற ஐந்தாறு பேர் உள்ளபோதிலும், தலை மட்டுமே மிகுந்த, அசுரர் தலைவனான ராகு, தனக்குத் தகுந்த வீரத்தினை எதிர் கொள்ளவேண்டி, அவர்களைப் எதிர்ப்பதில்லை. அவர்களில் குறிப்பிட்ட இருவரை மட்டும் – அதாவது ஒளிமிக்க, பகலவன் மற்றும் இரவனை – இரு பருவ காலங்கள் (நிறைமதி, இருண்மதி) பார்த்திருந்து, விழுங்குவான்.

 

வியாழன் முதலாக ஐந்தாறு பேர் – ஞாயிறு முதலான ஏழு கிரகங்கள்

இரவன் - மதி

விழுங்குவான் - பௌர்ணமியன்று சந்திர கிரகணம், மற்றும் அமாவாசையன்று சூரிய கிரகணம் நிகழ்வதைக் குறிக்கும் – ராகு அவர்களை விழுங்குவதாக.

அமுதம் கடையும்போது, தேவர்கள் நடுவில் திருட்டுத்தனமாக அசுரன் ராகு நுழைந்து, அமுதம் அருந்தியதாகவும், அவனை சூரியன், மற்றும் சந்திரன் அடையாளம் காட்டிக் கொடுத்ததாகவும், அதனால் விஷ்ணு, தன்னுடைய சக்கிரத்தினால் ராகுவின் தலையை வெட்டியதாகவும், அதனால் ராகுவுக்கு சூரியன் மற்றும் சந்திரன் பேரில் தனிப்பட்ட பகையென்றும், புராணங்கள் கூறும். தீய எண்ணமுடையோர் வன்மம் தீர்ப்பாரென கருத்து.

 

35.

புவனங்கள் அனைத்தினையும் (ஆதி) சேடன், தனது (ஆயிரம்) படமெனும் பலகையில் வைத்து சுமக்கின்றான். கூர்ம பதியோ, தனது முதுகு ஓட்டின் நடுவில் அவனை (சேடனை) சுமக்கின்றான். அவனையும் (கூர்மத்தையும்), கடலரசன், தனது வயிற்றின் மூலையில் இருத்திக்கொள்கின்றான். ஆகா! பெருந்தகைகளின் அளப்பரிய வலிமை மிகு சரிதங்கள்தான் என்னே!

 

புவனங்கள் பதினான்கு

கூர்ம பதி – விஷ்ணுவின் ஆமை அவதாரம்

 

36.

இமவான் மகனின் (மைனாகத்தின்) இறக்கைகளை வெட்ட, இந்திரன் குலிசம் எய்தபோது, அவனது தந்தை, அதனால் துயரப்பட்டு, ஏதும் செய்ய இயலாத நிலையில், குலிசத்தினின்றும் எழுந்த பெருந்தீயின் வெம்மை தாங்க இயலாது, அவன் (மைனாகம்) கடலுக்குள் புகுந்தது உகந்ததன்றே. ஐயகோ. அதற்கு அவன் (மைனாகம்) தனது இறக்கைகளை வெட்ட விட்டிருக்கலாமே.

 

முன்னோர் காலத்தில் மலைகளுக்கு இறக்கைகள் இருந்ததாகவும், அவை (மலைகள்) எங்கு பறந்து திரிந்து, பெருந்துயர் உண்டாக்கியதாகவும், அதனால் சினமுற்ற இந்திரன், அவற்றின் இறக்கைகளை வெட்ட, குலிசம் எய்ததாகவும் புராணங்கள் கூறும். அனுமன் இலங்கைக்கு, கடல்வழியே பறந்து செல்கையில், மைனாகம், கடலரசன் மூலமாக, அனுமனுக்கு உபசாரம் செய்ததாக வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

 

37.

பகலவன் கதிரினால் தீண்டப்பட்ட, சூரியகாந்திக் கல், உயிரற்றதாகிலும், சுடர்கின்றதே. (அப்படியிருக்க,) ஓர் பெருமை மிகு மனிதன், பிறர் செய்த இகழ்ச்சியை எங்ஙனம் பொறுப்பான்?

 

38.

சிங்கம், குட்டியாகிலும், மதமொழுகும் யானையின், அகன்ற தாடையில் அடிக்கின்றது. இயற்கையாக உள்ள குணமன்றோ இந்த வலிமை, வயதின் காரணமாகவல்ல.

 

39.

சாதி கீழுலகுக்குச் செல்லட்டும், அத்தனை நற்குணங்களும், அதனினும் கீழே போகட்டும்; நற்பண்பு மலையுச்சியினின்று வீழட்டும்; மாண்பு, நெருப்பில் எரிந்து போகட்டும்; எதிரியிடம் கொள்ளும் வீரத்தினை, இவ்வமயமே குலிசம் தாக்கட்டும். செல்வம் மட்டுமே எம்மிடம் இருக்கட்டும். இந்த ஒன்று (செல்வம்) இல்லாது, இப்பண்புகள் யாவும் வெறும் புல்லுக்கொப்பாகுமே.

 

கீழுலகம் – ஏழு கீழுலகங்கள்

குலிசம் – இந்திரனின் வச்சிராயுதம்

செல்வத்தினை அடைய நோக்கம் கொண்டவன், அத்தனை பண்புகளையும் கைவிட்டு விடுவான் என்று பொருள். அல்லது பண்புகள் நிறைந்தவனுக்கு, செல்வம் பகையென்றோ அல்லது அவனை அண்டாது என்றோ கொள்ளலாம்.

 

40.

புலன்கள் அனைத்தும் அவையே, செயலும் அதுவே, தடையற்ற புத்தியும் அதுவே, சொல்லும் அதுவே. ஆயினும், செல்வச் செழிப்பிழந்த, அந்த மனிதன் மட்டும், நொடியில் மாறிவிடுகின்றான். இது வேடிக்கையே.

 

செல்வமிழந்த மனிதன், மற்றவை (புலன்கள், மனம், அறிவு ஆகியவை) மாறாவிடினும், அவன் முற்றிலும் மாறிவிடுகின்றான் என.

 

41.

எந்த மனிதனிடத்தில் செல்வம் உள்ளதோ, அவனே நற்குலத்தோன், அவனே புலவன், அவனே அறிவாளி, அவனே பகுத்தறிவாளன், அவனே பேச்சாளன், அவனே நோக்கத் தக்கவன். அனைத்து பண்புகளும், செல்வத்தினையே சார்ந்துள்ளனவன்றோ.

 

42.

மந்திரியின் தவறான ஆலோசனையால், அரசன் அழிகின்றான். துறவி, உலகப் பற்றினாலும், மகன், செல்லத்தாலும், பிராமணன், வேதம் ஓதாமையாலும், குலம், தீய மகனாலும், ஒழுக்கம், தீயோரைப் பணிதலாலும், தன்னடக்கம், கள்ளாலும், வேளாண்மை, கண்காணிப்பின்மையாலும், உறவு, நாடு விட்டுப் போவதாலும், நட்பு, அக்கறை இன்மையாலும், செழிப்பு, நிருவாகக் குறையாலும், செல்வம், கவனமற்ற செலவழிப்பினாலும் நாசமடைகின்றன.

 

43.

கொடை, துய்த்தல், அழிவு ஆகிய மூன்று வழிகள் உண்டு செல்வம் கழிவதற்கு.  கொடையுமற்ற, துய்த்தலுமற்றவனின் செல்வம், மூன்றாவது வழியையே (அழிவை) அடைகின்றது.   

 

44.

சாணைக் கல்லில் தீட்டப்பட்ட மணியும், அம்பினால் தாக்கப்பட்ட, போரில் வென்றவனும், மதத்தினால் மெலிந்த களிறும், இலையுதிர் காலத்தில் மணல் திட்டுக்கள் நடுவே ஆறும், ஒரு பிறையே எஞ்சிய மதியும், காம கேளிக்கைகளில் மெலிந்த இளம் பெண்ணும், (இரப்போருக்கு அளித்த) கொடையினால் செல்வம் குன்றியோரும் – (இவை யாவுமே) மெலிந்தே சிறக்கும்.

 

மணல் திட்டுக்கள் நடுவே ஆறு – வெள்ளம் வடிந்தபின் மணல் திட்டுக்களிடையே ஆறு தெளிவான நீரோடுவதால் சிறக்கும்.

 

45.

வறியோன் கையளவு தானியமே விழைகின்றான். பின்னர் அவனே செழிப்படைந்தபின், புவியையும் புல்லுக்கு நிகராகக் கருதுகின்றான். எனவே, விழையும் பொருளின் பெருமையும் சிறுமையும் எண்ணத்தில் மாறுபடும் தன்மையதனால், பொருள், அதனை உடைத்தவனின் நிலையை பொறுத்து, பெருகியோ, சுருங்கியோ காணப்படுகின்றது எனலாம்.  

 

46.

அரசே! இந்தப் புவியெனும் பசுவினைக் கறக்க விரும்புவாயாகில், முதலில் இவ்வுலகினைக் கன்றெனப் பேணுவாய். அங்ஙனம் சீரிய வகையில் எவ்வமயமும் உலகினைப் பேணுவாயாகில், இந்தப் புவி, கற்பகக் கொடிபோன்று, பல்வகையான பயன்களையும் தரும். 

 

இவ்வுலகினைஇவ்வுலக மக்கள்

 

47.

மெய்யனாக, பொய்யனாக, கடுஞ்சொல்லோனாக, இன்சொல்லோனாக, கொடியவனாக, கருணையுள்ளத்தோனாக, கஞ்சனாக, ஈகையனாக, என்றும் செலவாளியாக, என்றும் பெருஞ்செல்வம் ஈட்டுவோனாக – அரசனின் நீதி, வேசியர் போன்று, பல்லுருவங்கள் ஏற்குமே.

 

48.                                                       

ஆளுகை, புகழ், வேதியரைப் பேணுதல், ஈகை, நுகர்ச்சி, நட்பினைப் பேணுதல் – இந்த ஆறு நற்பண்புகளும் எந்த மன்னனிடத்தில் இல்லையோ, அவனை அண்டியவருக்குப் பயன்தான் என்ன?

 

49.

உனது நெற்றிப் பட்டத்தில், படைத்தவனால் எவ்வளவு செல்வம்  எழுதப்பட்டுள்ளதோ – சிறிதளவோ அல்லது மிகுதியாகவோ – (நீ இருப்பது) பாலைவனமாகிலும், அது உனக்குக் கிட்டும்; ஆனால், (நீ இருப்பது) மேரு மலையாகிலும், அதைவிட அதிகம் கிடைக்காது. எனவே, தைரியமாக இரு, செல்வந்தர்களிடம் வீணாகத் தாழ்ந்து போகாதே. கிணறாகிலும், கடலாகிலும், குடம், தன்னளவே நீர் கொள்ளுமெனக் கண்டுகொள்வாய்.

மேரு மலை – பொன்னும் மணியும் நிறைந்த மலை

 

50.

கார்முகிலே! நீயே சாதகப் பறவையினுக்கு ஆதாரம் என யாருக்குத் தெரியாது? (பின்) நீயேன் எமது பணிவான வேண்டுகோளுக்காகக் காத்திருக்கின்றாய், சொல்.

சாதகப் பறவை முகில் நீரைத்தான் அருந்துமென்பர்

 

51.

ஏ நண்பா, சாதகப் பறவையே! சிறிது நேரம், கவனமாகக் கேள். முகில்கள் நிறைய வானத்திலுள்ளன. அனைத்தும் ஒரே வகையானவையல்ல. சில, மழை பொழிந்து, புவியை நனைக்கின்றன, சில வீணாக உறுமுகின்றன. எதையெதைக் காண்கின்றாயோ, அவற்றின் முன்னர் தாழ்வான சொற்கள் பகராதே.  

 

இதற்கு முந்தைய செய்யுளுடன், இச்சைய்யுளையும் இணைத்துப் பொருள் கொள்ளவேண்டும்.

இது மழையைப் பற்றியதல்ல. பொதுவாக, யாரிடம் இரக்கலாமென அறிந்து செல்லவேண்டுமென்பது கருத்து.

 

52.

கருணையின்மை, காரணமின்றி பகைமை, பிறர் செல்வம், பிறன்மனை மீது ஆசை, நன்மக்கள் மற்றும் உற்றாரிடம் பொறாமை, இவையெல்லாம் தீயவுள்ளத்தோருக்கு இயற்கையன்றோ?

 

53.

கல்வியெனும் அணிகலனுடையவராகிலும், தீயோர் தவிர்க்கப்பட வேண்டியவரே; மணியினால் அலங்கரிக்கப் பெற்றாலும், பாம்பு அச்சம் தருமன்றோ?

 

நெடுங்காலம் விஷம் கக்காமல் வாழ்ந்த பாம்பின் விஷம், மணியாக மாறிவிடுகின்றது என்றோர் நம்பிக்கை. 

 

54.

அடக்கத்தினை மடமை என்று கருதப்படும், நோன்பு நோற்றலை ஏமாற்றுதல் என்றும், தூய்மையை பாசாங்கு என்றும், வீரத்தினைக் கொடுமை என்றும், துறவினை அறிவின்மை என்றும், இன்சொல் உரைத்தலை தாழ்மை (ஏழ்மை) என்றும், திறமையை இறுமாப்பு என்றும், பேச்சுத் திறனை வாயாடித்தனமென்றும், உறுதியை இயலாமை என்றும் கூறுவர். தீயோரால் பழித்துரைக்கப்படாத பண்பும் உளதோ?

 

55.

பேராசை உண்டாகில், (மற்ற) தீய பண்புகள் எதற்கு? அவதூறு உண்டாகில், (பிற) பாவங்கள் எதற்கு? உண்மை உண்டாகில், தவமெதற்கு? உள்ளத் தூய்மை உண்டாகில், புண்ணிய நீராடல் எதற்கு? நல்லுள்ளம் உண்டாகில், சுற்றமெதற்கு? புகழுண்டாகில், அணிகலன்களெதற்கு? நற்கல்வியுண்டாகில், செல்வமெதற்கு? பழியுண்டாகில், சாவுமெதற்கு?

 

பேராசையை மிஞ்சிய தீய பண்பு இல்லை  

அவதூறு பகர்வதினும் பெரிய பாவமில்லை.

நல்லுள்ளம் உண்டாகில் யாவரும் சுற்றமே.

பழி சாவுக்கு நிகர்.

 

56.

பகலில் மங்கிய மதியும், இளமை கழிந்த அழகியும், தாமரையற்றத்  தடாகமும், எழுத்தறிவற்ற வாயுடன் நல்லுடலும், பொருளீட்டலே நோக்கமான வல்லவனும், வறுமையில் என்றும் வாடும் நல்லோரும், அரசவையில் இடம்பெற்ற தீயவனும் – இவ்வேழும் எனதுள்ளத்தைத் துளைக்கும் அம்புகளாம்.  

 

57.

மிக்கு சினத்தவனாகிய மன்னனுக்கு எவருமே வேண்டியவரில்லை. வேள்வி வேட்போனையும், நெருப்பு, தொட்டாற் சுடுமன்றோ.

வேண்டியவரும் அவனிடம் நெருங்க அஞ்சுவரென

 

58.

பேசாதிருந்தால், ஊமையென்றும், பேச்சுத்திறன் உண்டாகில், வம்பன், வாயாடியென்றும், அருகில் சென்றால், மதிப்பறியாதவன் என்றும், தூர நின்றால், பயந்தவனென்றும், பொறுமையாயிருந்தால், கோழையென்றும், (சுடுசொல்) பொறுக்காதிருந்தால், நற்பண்புகளற்றவனென்றும் உரைப்பர் – தொண்டாற்றத் தெரிதல் கடினமானது; யோகிகளும் தெரிந்திலர்.

 

59.

அனைத்துத் தீயோரையும் மிஞ்சிய பெருந்தீயவன், முன்னம் தான் வாழ்ந்த தீய வாழ்க்கையை மறந்தவன், விதிவசமாக பெரும் பேறு பெற்றவன், பண்புகளை வெறுப்பவன் – இத்தகை இழிந்தவனின் அண்மையில் யார்தான் மகிழ்ச்சியடைய இயலும்?

 

60.

நாளின் முற்பகல் நிழல், முதலில் நீண்டும், பின்னர் படிப்படியாக சுருங்கியும், பிற்பகல் நிழல், முதலில் சிறிதாகவும், படிப்படியாக நீண்டும், மாறுவதுபோல், முறையே, தீயோருடையவும், நல்லோருடையவும் நட்பு இருக்கும்.  

 

தீயோரின் நட்பு படிப்படியாகத் தேயும், நல்லோரின் நட்பு படிப்படியாக வளருமென.

61.

புல்லுண்ணும் மானுக்கும், நீரில் வாழும் மீனுக்கும், நிறைவோடு வாழும் நல்லோருக்கும், முறையே, வேடன், செம்படவன் மற்றும் தீயோரால் காரணமின்றி பகைமை உலகில் உண்டு. 

 

62.

நல்லோர் இணக்கத்தில் விருப்பம், பிறர் பண்புகளில் மகிழ்ச்சி, மூத்தோரிடம் பணிவு, கல்வியினில் பற்று, தன் மனைவிமேல் மட்டும் காதல், உலகோர் பழியில் அச்சம், சூலமேந்தியிடம் ஈடுபாடு, தன்னை அடக்கும் திறமை, தீயோரோடு தொடர்பு கொள்ளாமை – இந்த நற்பண்புகள் எந்த மனிதர்களிடத்தில் உள்ளனவோ, அவர்களை வணங்கினேன்.

 

சூலமேந்தி – சிவன் – கடவுளிடம் ஈடபாடு

தன் மனைவி மேல் மட்டும் காதல் – பிறன்மனை நோக்காமையென

 

63.

துன்பத்தில் மனவலிமை, செழிப்பினில் மன்னித்தல், அவையில் பேச்சுத்திறன், போரில் வீரம், புகழில் இச்சை, ஓதலில் ஈடுபாடு – இவை மேலோருக்கு இயற்கையாம்.

 

ஓதல் – மறையோதல்

 

64.

ஈகையை மறைத்தல், விருந்தோம்பலில் விரைவு, நன்மை செய்தபின் மவுனம், தனது நற்செயல்களை அவையில் உரையாமை, செல்வச் செழிப்பில் அடக்கம், பிறரைப் பற்றி மதிப்புக் குறைவாகப் பேசாமை – இத்தகைய, வாள்முனையில் உறைதலையொத்த நடத்தைகளை, நல்லோருக்கு, யார் கற்பித்தது?

 

ஈகையை மறைத்தல்தான் செய்ததைத் தானே சொல்லிக்கொள்ளாமை

 

65.

கைகளுக்கு உயர்ந்த கொடை, தலையினுக்கு குருவின் கால்களில் பணிதல், வாயினுக்கு மெய்ச்சொல், தோள்களுக்கு ஒப்பற்ற வெற்றி வலிமை, இதயத்தினுக்குத் தூய நடத்தை, செவிகளுக்கு கேள்வியறிவில் மேன்மை – இவ்வணிகலன்கள், மேலோருக்கு, செல்வமின்றியும், இயற்கையாமே.

 

66.

மேலோர் உள்ளம், செல்வச் செழிப்பினில், தாமரையையொத்த மென்மையாகவும், துயரத்தினில், பெரிய மலைப் பாறாங் கல்லினையொத்தக் கடினமாகவும் இருக்கும்.

 

67.

நீர், பழுக்கக் காய்ந்த இரும்பினில் வீழ்ந்தால், அடையாளமின்றி மறைகின்றது. அதுவே (நீர்) தாமரை இலையின்மேல் வீழ்ந்தால் முத்துக்களைப்போல் ஒளிர்கின்றது. அதுவே (நீர்த்துளி) சுவாதியன்று கடலில் சிப்பியினுள் வீழ்ந்தால் நல்முத்தாகின்றது. பொதுவாக, இழிந்த, நடுத்தர, உயர்ந்த குணங்கள், இணக்கத்தினால் ஏற்படும்.

 

சுவாதியன்று – சூரியன், சுவாதி நட்சத்திர மண்டலத்தில் வரும்போது, கடலில் சிப்பிகள் திறப்பதாகவும், அப்போது மழை பெய்தால், அந்த சிப்பியினுள் விழும் நீர்த்துளிகள் முத்தாக மாறுவதாகவும் கூறப்படும். அந்த முத்துக்கள் மிகவும் சிறந்தவை (குற்றமில்லாதவை) எனப்படும்.

 

68.

நன்னடத்தையினால் தந்தையை மகிழ்விப்பவனே (உண்மையான) மகன். கணவனின் நன்மையையே விழைபவள் (உண்மையான) மனைவி. வாழ்விலும், தாழ்விலும் சமமாக நடப்பவனே (உண்மையான) நண்பன். இவ்வுலகில் புண்ணியம் செய்தவருக்கே இம்மூன்றும் கிடைக்கும்.

 

69.

பணிவினால் தன்னை உயர்த்திக்கொள்ளல், பிறர் நற்குணங்களைக் கூறுவதனால், தனது நற்குணங்களைத் தெரியப்படுத்தல், மற்றவர்களின் நலனுக்காக பெரிய முயற்சிகளைத் தொடக்கிவைத்து, தனது நலனைப் பெறுதல், கொடிய சொற்களினால் பிறரைத் தூற்றும் தீயோரைப்  பொறுமையினால் ஒறுத்தல் – இத்தகைய வியத்தகு நடத்தைகளுடைய நல்லோரைப் போற்றாதார் யாரே!

 

70.

பழங்கள் பழுத்த மரங்கள், தலை குனிந்திருக்கும் புது நன்னீர் கொண்ட கார்முகில்கள், மிக்கு தாழ்வாக இருக்கும். செல்வம் வரினும், நன்மக்கள் பணிவோடிருப்பர். இதுவே பிறர்க்குதவுவோரின் இயற்கையாம்.  

 

71.

செவிகளின் அணிகலம் மறையோதலே, காதணிகளன்று. கைகளின் அணிகலன் கொடையே, கங்கணங்களன்று. மிக்கு கருணையுடைத்தோரின் உடலுக்கு அணிகலன் பிறர்க்குதவுதலே, சந்தனமன்று.

 

72.

பாவச்செயலினின்று தடுப்பான், நற்செய்கைக்கு உந்துவான், அந்தரங்கம் காப்பான், (நண்பனின்) நற்பண்புகளை எடுத்துரைப்பான், இடுக்கண் வருங்கால் கைவிடமாட்டான், நேரத்திற்கு உதவுவான் – நல்ல நண்பனின் இலக்கணம் இவையென பெரியோர் கூறுவர்.

 

73.

தாமரை மலர்களை, பகலவன், மலரச் செய்கின்றான், நிலவோ, குமுத மலர்களை மலரச் செய்கின்றது, வேண்டாமலே, நீர்கொண்ட முகிலும், மழை பொழிகின்றது, நல்லோர், தானாகவே, பிறர்க்குதவ முயற்சிக்கின்றனர்.

74.

பிறர் நலன் கோரி, தன்னலத்தினையும் துறப்பர், நன்மக்கள். தமது நலனுக்கு எதிரல்லாத, பிறர் நலனுக்கு முற்படுவர், சாமானியர்.  பிறர் நலனை, தமது நலன் வேண்டி, எதிர்ப்பர், மனித அரக்கர்கள். ஆனால், பிறர் நலனை, வீணாக எதிர்ப்பவர்களை எத்தகையோரெனக்  கூறுவதென்றியோம், அந்தோ!

 

வீணாக – தமக்கு எத்தகைய ஆதாயமுமின்றி

 

75.

பால், தனது அனைத்து குணங்களையும், முன்னர், நீருக்களித்தது (பாலின் பெரும் பகுதி நீரே). பாலின் துயரத்தை (பாலைக் கொதிக்கவைக்கையில்) கண்ட நீர், தன்னையே (நீராவியாக) நெருப்புக்கு அர்ப்பணித்தது. நண்பனின் துயரத்தைக் கண்ட பால், (பொங்கி) தன்னையே நெருப்புக்கு அர்ப்பணிக்கத் துணிந்தது. திரும்பவும் நீருடன் கலந்தபின் (நீரூற்றித் தணித்தபின்), பால் சாந்தமடைந்தது. நல்லோரின் நட்பு, ஒருவருக்கொருவர், இங்ஙனமே இருக்கும்.

 

76.

ஒரு பகுதியில் கேசவன் உறங்குகின்றான். மற்றோர் பகுதியில், அவனுடைய (கேசவனுடைய) எதிரிகளின் குலம் உள்ளது. இன்னுமோர் பகுதியில், அடைக்கலம் புகுந்த, மலைத் தொடர்கள் உள்ளன. மற்றுமோர் பகுதியில், வடவாக் கனல் முதலாக, உலகை அழிக்கும், ஊழிக் கனல்கள் உள்ளன. ஆகா! எத்தகைய, ஆழ்ந்து, விரிந்து, பளு சுமக்கவல்லது, கடற் பரப்பு!

 

கேசவன் – விஷ்ணு

எதிரிகள் – காலகேயரெனும் தானவர்கள்

மலைத் தொடர்கள் – முன்னர் மலைகளுக்கு இறக்கைகளிருந்ததாகவும், அவை பறந்து, மிக்கு கேடு விளைவித்ததாகவும், அதனால் சினம் கொண்ட இந்திரன் அவற்றின் இறக்கைகளை வெட்டியதாகவும், அப்போது மைனாகம் முதலான மலைகள் கடலுக்குள் அடைக்கலம் புகுந்ததாகவும், புராணங்கள் கூறும்.

வடவாக் கனல் – கடலடியில் உள்ளதாகக் கருதப்படும். அது ஊழிக் காலத்தில் வெடிக்குமென கருதப்படுகின்றது.

 

77.

வேட்கையை அடக்கு, பொறுமையைக் கடைப்பிடி, கருவம் கொள்ளாதே, பாவச்செயலில் விருப்பம் கொள்ளாதே, உண்மை பேசு, சான்றோர் வழியில் நட, கற்றோருக்குப் பணி செய், மதிக்கத் தக்கோரை மதி, எதிரியோடும் நட்பு கொள், தற்பெருமை பேசாதே, (தனது) புகழைக் காப்பாற்று, துயருற்றோரிடம் கருணை கொள் – இவை நல்லோரின் இலக்கணம்.  

 

எதிரியோடும் நட்பு கொள் – எதிரியையும் மதி என்றும் பொருள் கொள்ளலாம். எதிரியின் வலிமைகளை மதிக்காமல், போரில் இறங்கினால், தோல்வியே மிஞ்சும் என்பதனால்.

 

78.

உள்ளத்தில், சொல்லில், செயலில், புண்ணிய அமுதம் நிறைந்தோராக, வெகு சிலரே உளர், நல்லோர். அவர் மூவுலகத்தினையும் தமது உபகாரத்தினால் மகிழ்விப்பர், என்றும், பிறர் நற்பண்புகளை, மிகச் சிறியவையாகினும், பெரிதாக்கி, தமதுள்ளத்துள் மகிழ்வர்.

 

79.

பொன்மலை, வெள்ளிமலைகளினால் என்ன பயன்? அங்கு வளரும் மரங்கள் மரங்களாகவே (அப்படியே) உள்ளன. யாம் மலையென்பது மலய மலையையே, (ஏனெனில்) அங்கு வளரும் வால்மிளகு, வேம்பு மற்றும் குடசப்பாலை மரங்களும் சந்தன மரங்களாகின்றனவே!

 

பொன் மலை – மேரு;  வெள்ளி மலை – இமயம் அல்லது கயிலாயம்

மலய மலை – மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதி

வால்மிளகு, வேம்பு, குடசப்பாலை ஆகியவை சந்தன மரமாகும் என்பதற்கு ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.

 

80.

(பாற்கடலைக் கடையும்போது தோன்றிய) உயர்ந்த இரத்தினங்களால் தேவர்கள் நிறைவடையவில்லை. (அதனின்று தோன்றிய) கொடிய நஞ்சுக்கும் அஞ்சவில்லை. அமுதம் பெறாது (தேவர்கள்) ஓய்வடையவில்லை. தாம் நிச்சயித்த குறிக்கோளை அடையும் வரை, ஓயமாட்டார்,  மனவுறுதியுள்ளோர்.

 

81.

சில நேரம் தரையில் படுத்தல், சில நேரம் கட்டிலில் படுத்தல், சில நேரம் காய்கறிகள் உண்ணல், சில நேரம் உயர் அடிசில் சுவைத்தல், சில நேரம் கந்தை உடுத்தல், சில நேரம் உயர்ந்த ஆடைகள் அணிதல் – காரியத்தில் கண்ணாயிருக்கும் பெரியோர், இன்பத்தையும், துன்பத்தினையும் சட்டை செய்யமாட்டார். 

 

82.

மேன்மையின் அணிகலம் நற்பண்பு, வீரத்தின் அணிகலம் சொல்லடக்கம், ஞானத்தின் அணிகலம் மனவமைதி, கேள்வியறிவின் அணிகலம் அடக்கம், செல்வத்தின் அணிகலம் தக்கோருக்குக் கொடை, தவத்தின் அணிகலம் சினம் ஒறுத்தல், அதிகாரத்தின் அணிகலன் பொறுத்தல், அறத்தின் அணிகலன் கள்ளமின்மை, யாவற்றிற்கும் முலகாரணமான நல்லொழுக்கமே தலைசிறந்த அணிகலனாம்.

 

அறத்தின் அணிகலம் பொய்வேடமிடாதிருத்தல் என்றும் கொள்ளலாம்.

 

83.

நீதியில் வல்லோர் இகழுட்டும் அல்லது போற்றட்டும், அலைமகள் வரட்டும் அல்லது தன் விருப்பப்படி செல்லட்டும், இன்றே சாவு நிகழட்டும் அல்லது யுகமுடிவினில், அறவழியினின்றும் அடி வழுவமாட்டார், மனவுறுதி உடைத்தோர். 

 

அலைமகள் – இலக்குமி – செல்வம்

 

84.

கவலைக்குள்ளானாலும், மனவுறுதியுள்ளோனின் மனத் திண்ணத்தினைக் குலைக்க இயலாது -- தீயினை கீழ் நோக்கிப் பிடித்தாலும், அதன் சுடர்  எப்போதும் கீழ் நோக்காதோ, அங்ஙனமே.

 

85.

எவனின் மனத்தினை, பெண்ணின் கடைக்கண் பார்வையெனும் அம்பு துளைக்க இயலாதோ, சினமெனும் தீச்சுடர் எரிக்க இயலாதோ, புலன் நுகர்ச்சி வேட்கைத் தளையினால் கட்ட இயலாதோ, அந்த மனவுறுதி உடைத்தோன், மூவுலகங்கள் முழுதினையும் வெல்வான்.

 

86.

கையினால் தரையில் அடிக்கப்பட்ட பந்து மேலே எழும்புவது போலும், பொதுவாக, நன்னடத்தையுடையோரின் வீழ்ச்சியும் நீடிப்பதல்ல.

 

நீடிப்பதல்ல – திரும்பவும் எழுவரென

 

87.

உயர் மலையுச்சியினின்றும், இவ்வுடல் கடினமான தரையில் வீழ்ந்து, கடும் பாறைகளிடையே சிதறலும் மேலாம், கொடிய நச்சரவத்தின் வாய்ப் பற்களிடையே கை நுழைத்தலும் மேலாம், நெருப்பினில் வீழ்தலும் மேலாம், ஆயின் நல்லொழுக்கம் குலையலாகாதே.

 

88.

நெருப்பும் அவனுக்கு நீராகும், கடலும் அவ்வமயமே ஓடையாகும், மேருவும் சிறிய கல்லாகும், அரியேறும் அப்போதே மானாகும், அரவமும் மாலை நிகராகும், நச்சுச் சாறும் அமுத மழையாகும், எவனில், அனைத்துலகும், மிக்கு மதிக்கும், நல்லொழுக்கம் மேவி நிற்குமோ,

 

அரியேறு – சிங்கம்

 

89.

வெட்டினாலும், கிளைக்கின்றது, மரம்; தேய்ந்தாலும், மறுபடியும் வளர்கின்றது, மதி – இங்ஙனம் ஆராயும் நல்லோர், உலகில் துன்பமடைவதில்லை.

 

 90.

வழிகாட்டியாக, குரு பிருகஸ்பதியும், குலிசம் ஆயுதமாகவும், தேவர்கள் படையாகவும், வானுலகே கோட்டையாகவும், அரியின் அருளோடும், அயிராவதம் வாகனமாகவும் – இத்தகைய செல்வாக்கும், வலிமையும் இந்திரன் கொண்டிருந்தாலும், எதிரிகளால் போரில் தோற்கடிக்கப்பட்டான். இதனால் விளங்குவதாவது – விதியினுக்கு ஆட்படுதல் நன்று. வெறும் ஆண்மையினால் பயன்தானென்ன, ஐயகோ! 

 

குரு பிருகஸ்பதிவியாழன்

இந்திரன் செருக்குற்று போர் தொடுத்தானென்றும், அதனால் தோல்வி கண்டான் என்றும் கூறப்படும். 

 

91.

அரவமொன்று கூடைக்குள் வீழ்ந்து, வெளியேற முடியாமல், பசியினால் வாடி, உடல் இளைத்து, நம்பிக்கையிழந்து, சுருண்டு கிடந்தது. எலியொன்று, இரவில், அக்கூடையைக் கடித்து, ஓட்டை செய்து, (நேராக) அந்த அரவத்தின் வாயினுள், தானே வீழ்ந்தது. அரவம், அந்த எலியைக் கொன்று, அதன் இறைச்சியைத் தின்று, அதே ஓட்டை வழியாக, விரைவாக வெளியேறியது. காணீர், உலகோரே, மனிதனின் உயர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் விதியே காரணம்.

 

நம் செயல்கள், சில நேரங்களில், நாம் எதிர்பார்க்காத விளைவுகளை உண்டாக்குகின்றது. அதனைத்தான் விதியென்று கூறப்பட்டுள்ளது. எலியின் சாவுக்கும், அரவம் உயிர் பிழைத்ததற்கும், வேறு காரணம் கூற இயலாது.

 

92.

செயலுக்குகந்தே மனிதருக்குப் பயன் கிடைக்கும், முன்வினைக்குகந்தே பகுத்தறிவும் இயங்கும். ஆயினும், அறிவாளி நன்கு ஆராய்ந்த பின்னரே செயல்பட வேண்டும். 

 

93.

வழுக்கையன், தலையில் சூரியக் கதிர்களின் சூட்டினால் பீடிக்கப்பட்டு, நிழலான இடம் தேடி, விதிவசமாக பனை மரத்தடியில் சென்றான். அங்கும் அவன் தலையில் பெரிய பனம் பழமொன்று வீழ்ந்து, பேரோசையோடு, அவன் மண்டை உடைந்தது. அதிருஷ்டம் இல்லாதவன், எங்கு சென்றாலும், ஆபத்து அவனுக்கு முன் செல்கின்றது.

 

94.

சந்திர, சூரியர்களின் கிரகணமும், யானை மற்றும் அரவத்தின் கட்டும், அறிவாளிகளின் வறுமையும் கண்டு, ஐயகோ! விதியே வலிமை வாய்ந்ததென நான் கருதுகின்றேன்.

 

சந்திர சூரியர்கள், ராகு கிரகத்தினால் மறைக்கப்படுவதனால், கிரகணம் ஏற்படுகின்றதென முன்னம் கருதப்பட்டது.

வலிமை கொண்ட யானையையும், கொடிய நச்சரவத்தினையும் மனிதன் கட்டிப் போடுகின்றான்.

 

95.

முதலில், புவியினுக்கோர் அணிகலனென, அனைத்து நற்பண்புகளும் உடைத்த, ஓர் மனிதருள் மாணிக்கத்தினை, படைக்கின்றான். அதன் பின்னர், அவனை, அப்போதே அழிப்பானேயாகில், ஐயகோ! கொடிது விதியின் மடமை!

 

அப்போதே – மனிதருள் மாணிக்கமெனத் திகழ்கையில் என்று பொருள் கொள்ளலாம். அல்லது, அது மனிதனின் குறுகிய ஆயுட்காலத்தினைக் குறிக்கலாம்.

விதி என்பது படைக்கும் பிரமனையும், ஊழ்வினையையும் குறிக்கும்.

 

96.

மதி, அமுதத்தின் உறைவிடமாயினும், ஔடதங்களுக்கெல்லாம் தலைவனாயினும், (நூறு மருத்துவர் எனப்படும்) சதயமெனும் தாரைக் கூட்டத்தினால் தொடரப்பட்டாலும், சிவனின் தலையணிகலனாகத் திகழ்ந்தாலும், அவனையும் தேய்மானம் விடுவதில்லை. ஊழ்வினை நியமித்ததை யாரால்தான் மீற இயலும்?

 

மதியினுக்கு சோமன் என்றும் பெயர். சோமன் எனும் யாகத்தில் அமுதம் பெறப்படுவதாக.

இரவின் தண்மதியில் ஔடதங்கள் வளர்வதாகக் கருதப்படும்.

சதயம் என்பது வடமொழியில் சதபிஷக் எனப்படும். அது நூறு தாரைகளின் கூட்டமாகும் (constellation) அந்த நூறும் மருத்துவர்களெனப்படும்.

இத்தனை வலிமைகள் படைத்திருந்தும், மதி தேய்வடைவது ஊழ்வினையே

 

97.

எல்லாம் வல்ல ஊழ்வினை, உலகில் யாருக்கு என்னவென்று, தானே நிர்ணயித்துள்ளதோ, அது அவனை அடையும். (நாம் அடையப் பெறுவது எதுவும்,) எந்த பெரும் ஆதரவினாலும் அல்ல. அனைவரின் விருப்பத்தினையும் நிறைவு செய்யும் மழை முகில், நாளும் மழை பொழிந்தாலும், இரண்டு அல்லது மூன்று சிறு துளிகளே சாதகப் பறவையின் வாயில் விழுகின்றனவன்றோ!

 

அடையப் பெறுவது – எத்தகைய பெரிய ஆதரவினாலும் நமக்கு ஏதும் கிடைப்பதில்லை – ஊழ்வினையே காரணமென.

 

98.

குழலாதொண்டைப் புதரில் இலையே இல்லையெனில், இளவேனிலின் குற்றமென்ன? ஆந்தையும் பகலில் பார்க்கமுடியாதாகில், பகலவனின் குற்றமென்ன? மழை நீர், சாதகப் பறவையின் வாயில் விழாமற்போனால், முகிலின் குற்றமென்ன? முன்னம் விதியினால் நெற்றியில் எழுதப்பட்டதை யாரால் அழிக்க இயலும்?

 

குழலாதொண்டை – சீமைக் கருவேலம் போன்ற முட்புதர்

விதி – ஊழ்வினை

 

99.

தேவர்களைத் தொழுவோம், ஆயின் அவர்களும் விதிவசப்பட்டவர்களே. எனவே, விதியே தொழத்தக்கது. ஆனால் விதியும், வினைக்குத் தகுந்த பயனையே வழங்குகின்றது. பயன் வினைக்கு ஏற்பதாகில், தேவர்கள்தான் எதற்கு? விதியும் எதற்கு? விதியும் கட்டுதற்கு இயலாத, அந்த வினைகளையே வணங்கினோம்.

 

விதி – படைக்கும் பிரமனைக் குறிக்கும் – ஊழ்வினையல்ல

வினை – கரும வினை - நாம் இயற்றும் கருமங்களின்படியே நமது ஊழ்வினை அமையும். அதனை விதியினாலும் மாற்றி எழுத இயலாதென.

ஆனால், கீதையில் உரைத்தபடி, பயனை எதிர்நோக்காது அனைத்து கருமங்களையும் நாம் செய்வோமேயாகில் – அதாவது பயனை இறைவனுக்கு அர்ப்பணிப்போமேயாகில், அந்தக் கருமமும் மனிதரைக் கட்டாது. கருமங்களே உயர்ந்ததென்று இறுமாந்திருந்த முனிவர்களுக்குப் பாடம் புகட்டவே சிவன் ஆண்டிக் கோலத்தில் (பிட்சாடனராக) வந்தாரென புராணங்கள் கூறும்.

 

100.

பிரமனோ, ஓர் குயவனைப் போன்று, நியமிக்கப்பட்டபடி, பேரண்டமெனும் பாண்டத்தினுள் (வயிற்றில்) உள்ளான். விஷ்ணுவோ, பத்து அவதாரங்களெடுத்து, பேரிடரினால் ஒளிந்துள்ளான். உருத்திரனோ, மண்டையோட்டைக் கையிலேந்தி, பிச்சையெடுக்கின்றான். சூரியனோ, நாளும் ஆகாயத்தில் சுற்றுகின்றான். எனவே, இவை யாவற்றிற்கும் காரணமான கருமத்தினை வணங்கினோம்.

 

இவ்வுலகம், சீராகவும், ஒழுங்கினைக் கடைப்பிடித்தும் இயங்குகின்றது. இதனை வடமொழியில் ரித (Rhythm) என்று கூறப்படும். இந்த ஒழுங்கினைத் தான் கருமமென இந்த செய்யுளில் கூறப்பட்டுள்ளது.

 

101.

நல்லுருவமோ, குலமோ, நற்பண்புகளோ, கல்வியோ அல்லது முயன்று, தான் செய்த சேவையோ – எதுவும் மனிதனுக்குப் பயன் தருவதில்லை. முந்தைய (முன்னம் அல்லது முற்பிறவியில் செய்த) தவத்தினால் பெற்ற நல்வினைதான் (பாக்கியம்) காலத்தினால், மரத்தினைப் போன்று, பழுத்து மனிதனுக்கு, பயன் தருகின்றது.

 

ஊழ்வினை மூன்று வகைப்படும் – மொத்தம் சேர்த்த வினைகள் (sancita), அவற்றில் பயன் தரத் தொடங்கிவிட்ட வினைகள் (prArabdha), இனி பயன் தரப்போகும் வினைகள் (Agami). இப்போது பயன் தரத் தொடங்கிவிட்ட வினைகளால்தான் இந்தப் பிறவியும், உடலும். இவற்றை அனுபவித்தே தீர வேண்டும். மிகுதியுள்ள, இனி வரப்போகும் வினைப் பயன்களை, ஞானத்தினை அடைந்து, அழித்திட முடியும். ஞானம் அடையுமுன், இந்தப் பிறவியில் நாம் செய்யும் வினைகள், மொத்த வினைகளில் சேர்ந்துகொண்டே போகும். ஞானம் அடைந்த பின்னரும், உயிரிருக்கும் வரை, வினைகள் பயன் தரச்செய்யும். ஆனால், அவை அவனை பாதிக்காது.

 

102.

காட்டிலோ, பகைவர், நீர் மற்றும் நெருப்பினிடையோ, பெருங்கடலிலோ அல்லது மலையுச்சியிலோ, உறங்கும்போதோ, கவனமற்ற நிலையிலோ அல்லது ஆபத்தான நிலையிலோ, தான் முன்னம் செய்த நல்வினைகளே ஒருவனைக் காக்கின்றன.

 

103.

ஓ நல்லோரே! தீயோரை நல்லோராகவும், அறிவிலிகளை அறிஞர்களாகவும், பகைவரை நண்பராகவும், கண்ணுக்குத் தென்படாததை நேரில் தெரிவதாகவும், கொடிய ஆலகால நஞ்சினையும் அமுதமாகவும், அவ்வமயமே மாற்றுகின்ற, அந்த நல்வினைகளெனும் பகவதியை, விரும்பியவற்றினைப் பெற,  வழிபடுவீராக. மற்ற பல குணங்களில் வீணாக நம்பிக்கை வைக்காதீர்.

 

104.

அழகிய மனை, களித்திடப் பெண்டிர், வெண்குடையோடு திகழும் செல்வம் – இவை யாவும், நமக்கு ஊழ்வினைகள் சாதகமாக இருக்கும்போது, நீண்ட காலம் வரும். அன்றேல், காமக் கேளிக்கைகளிடையே, அறுந்து போன மாலையின் முத்துக்கள் நாற்றிசையிலும் சிதறுவது போன்று, இவை யாவும் காணாமற் போவது காணீர்.

 

வெண்குடைமன்னர்கள் பவனி வருகையில் பிடிக்கப்படும் வெண்குடை

அறுந்து போன மாலையின் முத்துக்கள் – கேளிக்கைகளின் போது, மாலை அறுந்து போனதும் கவனத்தில் இருக்காது. அதுபோல், நமக்குத் தெரியாமலே இவையும் காணாமற் போகுமென.

 

105.

நல்லதோ, கெட்டதோ, ஒரு செயலைத் தொடங்குமுன், ஓர் அறிவாளி, அதன் விளைவுகளை நன்கு ஆராய்ந்து செயல்படவேண்டும். அவசரத்தில் செய்த செயல்கள், சாகும்வரை, ஓர் அம்பைப் போன்று உள்ளத்தினை வருத்துவதாக இருக்கும்.

 

106.

இந்த கரும பூமியை அடைந்தும், தவமியற்றத் தவறிய அந்த பேறு குன்றிய மனிதனின் வாழ்க்கை, வைடூரியம் பதித்த பாத்திரத்தில், சந்தன மரத்தின் விறகினால், எள் பிண்ணாக்கினை சமைத்ததற்கொப்பாகும்; தங்கத்தினால் செய்த ஏர்முனையினால், எருக்கு வேருக்காக, நிலத்தைத்  தோண்டியதற்கொப்பாகும்; கர்ப்பூர மரத்தினை வெட்டி, வரகு பயிருக்கு வேலி அமைத்ததற்கொப்பாகும்.

 

நமது நாடு கரும பூமி எனப்படும். இங்கு தவமியற்றி நற்கதி பெறலாமென. தவமென்பது பலவித நல்வினைகள் இயற்றுவதையும் குறிக்கும்.

 

107.

மனிதன், கடலில் மூழ்கட்டும், மேரு மலையுச்சியினை எட்டட்டும், பகைவரை போரில் வெல்லட்டும், வாணியம், உழவுத் தொழில் முதலாக, அனைத்து கல்வி மற்றும் கலைகளையும் பயிலட்டும், மிக்கு முயன்று, பரந்த ஆகாயத்தினில், பறவையைப் போன்று பறக்கட்டும். ஆனால், இவ்வுலகில், வினை வசத்தால், எது நடக்கக் கூடாதோ, அது நடப்பதில்லை. எது நடக்க வேண்டுமோ, அது நடவாமல் இருப்பதில்லை.   

 

மனிதன் எவ்வளவு முயன்றாலும், ஊழ்வினையினை மீற இயலாதென. ஆனால், இன்று ஊழ்வினையாக நாம் எதிர்கொள்வது, நேற்று செய்தவற்றின் பயன்களே. எனவே இன்று நாம் செய்யும் செயல்கள், நாளை ஊழ்வினையாக வரும் என்பதுவும் உறுதி. ஊழ்வினையின் பெயரில், நமது கடமைகளைச் செய்யத் தவறுவதோ, அல்லது நம் முயற்சிகளில் தளர்வதோ அறிவீனமாகும். மனிதன் யாவற்றையும் தனது ஆயுட்காலமெனும் குறுகிய நோக்கில் காண்பது பெருந் தவறு. 

 

108.

எந்த மனிதனுக்கு முந்தைய நல்வினைகள் நிரம்பவுள்ளனவோ, அவனுக்குக் கொடிய காடும் அவனது தலைநகரமாகும், அனைத்து மக்களும் அவனுக்கு நல்லோராகவே (அல்லது உற்றோராகவே) இருப்பர். அனைத்துலகும் அவனுக்குச் செல்வமும், இரத்தினங்களும் கொழிப்பதாக இருக்கும்.

 

இதர செய்யுட்கள்

1.

மனிதனுக்கு, உடலிலுள்ளவற்றிலெல்லாம், சோம்பேறித்தனமே பெரும் பகையாம். கடும் உழைப்புக்கு நிகரான சுற்றமில்லை; அதனையுடைத்தவன் கெடுவதில்லை.

 

2.

அடையத் தகுந்தது எது? நல்லோரிணக்கம். துன்பம் யாது? கல்வியற்றவரின் தொடர்பு. இழப்பு யாது? நேரத்தை வீணாக்குதல். திறமை யாது? அறவழிக் கோட்பாடுகளில் விருப்பம். வீரன் யார்? புலன்களை வென்றவன். பிரியமானவள் யார்? ஈடுபாடுடைய மனைவி. செல்வம் யாது? கல்வி. இன்பம் யாது? நாடு துறவாமை. கொற்றம் யாது? ஆளுகை.

 

3.

மேன்மக்களுக்கு, சாதிமல்லியைப் போன்று, இரண்டே போக்காம் – யாவர் தலையையும் அலங்கரித்தல், அன்றேல் காட்டில் வாடிப்போதல்.

 

மேன்மக்கள், மலர்களைப் போன்று அடிபணிந்திருக்க மாட்டாரென.

33-வது செய்யுள் நோக்கவும்.

 

4.

தகாத சொல்லவற்றவராலும், இனிய சொல்லுடைத்தவராலும், தன்மனையால் மட்டுமே மகிழ்வோராலும், பிற நிந்தை செய்யாதவராலும், உலகு ஆங்காங்கு அலங்கரிக்கப்படுகின்றது.

 

5.

சூரியனின் விரிந்து பரந்த ஒளிக் கிரணங்கள் போன்று, ஒரேயொரு சூரனாகிலும், புவியனைத்தினையும் அடிமை கொள்கின்றான்.

 

6.

அடக்கம் முதலான மற்று அனைத்து நற்குணங்களுக்கும் ஆதாரமானதும், உள்ளத்தினை மிக்கு தூய்மையாக வைத்திருப்பதுவும், பெற்றவளைப் போன்று, தூய உள்ளத்துடன், எவ்வமயமும் துணையிருப்பதுவுமான,  உண்மையின் வழி நிற்கும் விரதத்தினை மேற்கொண்ட, மகிமை படைத்தோர், தம்முடைய விரதத்தினைத் துறப்பதினும், உவந்து உயிர் துறப்பர். 

 

7.

கண்ணாடியில் பிரதிபலிக்கும் முகத்தின் நிழலினை எங்ஙனம் கவர இயலாதோ, அங்ஙனமே, பெண்ணுள்ளத்தினை ஆழம் காண இயலாதென, அவர்கள் உள்ளப் பாங்கினையறிதல், குறுகிய, வளைவு நெளிவுகளுடைய மலைப் பாதையினைக் கடப்பதைப் போன்று, கடினமானதென, அவர்கள் மனம் தாமரை இலை நீர் போன்று நிலையற்றதென, அறிஞர்கள் கூறுவர்.  குற்றங்களுடன் வளரும் பெண், நஞ்சுக் குருத்துக்களுடைய கொடி போன்றாம்.

 

8.

போர்முனையில், பகைவனை எதிர்கொண்டு வீழ்ந்தவன், வெற்றி யடைவானா அல்லது வானுலகம் செல்வானா, என்பதிருக்கட்டும். இரு தரப்பினரின் பாராட்டுதலும், காதுகளுக்குப் பெரும் இன்பமளிக்குமன்றோ!

 

9.

இயற்கையின் அனைத்து விதமான அதிசயங்களிலும் இரண்டு – வராகமும் ராகுவும் - வியப்பூட்டுகின்றன. புவி நீரில் மூழ்கியபோது, வராகம், புவியினை தன்னந்தனியே தூக்கிப் பிடித்தது. தலைமட்டுமே மிகுந்த ராகுவோ, தனது எதிரியை (சூரியனை) விழுங்கிய பின், அவனை விட்டுவிடுகின்றான்.

 

வராகம் – விஷ்ணுவின் அவதாரம்.

ராகு என்ற அசுரனுக்கு, தலை மட்டுமே மிகுந்துள்ளது என.

 

10.

புவியினை நீரினால் சூழ்ந்துள்ள ஆழ்கடல், நூறு யோஜனை தூரம் பரந்தது. எவ்வமயமும், தனது பாதையில் பயணிக்கும் சூரியனோ, ஆகாயம் முழுவதினையும் அளக்கின்றான். இங்ஙனம், அனைத்துமே தமது நிர்ணியிக்கப்பட்ட வரம்பினுள் இயங்குகின்றன. ஆனால் அனைத்தையும் வெல்லத்தக்க, ஞானியின் அறிவினுக்கோர் எல்லையில்லை.

 

ஒரு யோஜனை – நான்கு காதங்கள்.

 

11.

தேவனென ஒருவனையே கொள்வாய் – கேசவனோ அல்லது சிவனோ; நண்பனென ஒருவனையே கொள்வாய் – அரசனோ அல்லது ஆண்டியோ;

இருப்பிடமென ஒன்றையே கொள்வாய் – நகரமோ அல்லது காடோ;

மனைவியென ஒருத்தியையே கொள்வாய் – அழகியோ அன்றேல் குகை.

 

குகை – துறவு நிலை

 

12.

இந்தப் புவி, ஆமை, மலைகள், திசை யானைகள் மற்றும் பாம்பு அரசன் ஆகியோரால் சுமக்கப்பட்டாலும், அது அதிர்கின்றது. ஆயின், தூய உள்ளம் படைத்தோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட காரியம், ஊழிக் காலமாகிலும் அசைவதில்லை.

 

ஆமை – புவியை சுமந்த விஷ்ணுவின் அவதாரம்.

மலைகள் – புவியை சுமக்கும் ஏழு மலைகள்.

யானைகள் – எண்திசைகளை சுமக்கும் யானைகள்.

பாம்பு அரசன் – ஆதி சேடன் புவியை சுமப்பதாக.

 

13.

புவியை சுமப்பதனால் ஆமைக்கு உடல் வலி ஏற்படுவதில்லையா? அது புவியை விட்டெறிவதில்லையே! பகலவன் இடைவிடாமல் தனது பாதையில் சுற்றுவதினால் தளர்ந்து போவதில்லையா? அவன் நிற்பதேயில்லையே! அங்ஙனமே, மேன்மக்கள், தாம் ஏற்றுக்கொண்ட காரியத்தைக் கைவிட, வெட்குவர். தாம் ஏற்ற பணியினை நிறைவு செய்தல், நன்மக்களின் பரம்பரை விரதமாகும்.

 

இந்த செய்யுளை, இதற்கு முந்தைய செய்யுளின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம்.

 

14.

வாய் நிறையக் கவளம் கொண்ட யார்தான் உலகில் வசப்படுவதில்லை? முகத்தில் மாவு தடவப்பட்ட மிருதங்கமும் இனிய ஓசை தருமன்றோ!

 

இச்செய்யுளின் உட்பொருள் – யாரையும் வசப்படுத்த முடியுமென கூறப்படுகிறது.

 

15.

தமது தேவைகளை மட்டுமே நிறைவு செய்துகொள்வோர் ஆயிரக் கணக்கில் உள்ளனர். ஆனால், பிறர் நலனே தனது நலனாகக் கருதுவோன் மட்டுமே நல்லோரில் முதல்வனாவான். வடவாக்கனல், தணிக்க இயலா தனது வேட்கைக்காக, கடல் நீரினைக் குடிக்கின்றது. ஆனால் முகில், நீர் கொள்வதோ, உலகோரின் கோடைக் கால வெப்பத்தினைத் தணிக்க வேண்டியே.

 

வடவாக்கனல் – கடலினடியில் உள்ள பெருந் தீக்கனல் (volcano)

 

16.

(எங்ஙனம்) ஒரு கவி, தனது கவிதையில், எங்கெங்கிருந்தோ அழகிய சொற்களைக் கொணர்ந்து, கூடாத சொற்களை விலக்கி, உலக வழக்கிற்கேற்ப, தகுந்த சொற்களைக் கோர்த்து, கற்றோர் அவையினை எவ்வமயமும், மகிழ்விக்கும் பணியில் அக்கறையோடு இருப்பானோ, (அங்ஙனமே,) ஒரு மந்திரியும், போரில் ஈடுபடாமல், தூரத்தினின்று, புதுச் செல்வம் கொணர்ந்து, எவ்வமயமும் மேலார் அவையை மகிழ்விப்பதிலும், நாட்டு மக்களின் விருப்பத்திற்குகந்து, படிப்படியாக நடவடிக்கைகள் எடுப்பதிலும், எவ்வமயமும் அக்கறையோடு இருப்பான்.

 

இந்தச் செய்யுளின் சொற்களனைத்துமே, கவி, மந்திரி இருவருக்குமே பொருந்தும்படி, சிலேடையாக அமைக்கப்பட்டுள்ளன.

 

17.

சற்குணத்தோர், ஏதும் உபதேசம் செய்யாவிடினும், அவர்தம் சேவகம் செய்யத் தக்கதே. ஏனெனில், அவர்கள் சாதாரணமாகக் கூறும் சொற்களும் சாத்திரங்களாகுமே.

 

சற்குணத்தோர், பொதுவாக பேசும் சொற்கள் யாவுமே உபதேசம் போன்றதே எனப் பொருள்.

 

18.

பொதுவாக, நற்குடிமகன், வீழ்ந்தாலும், பந்துபோன்று, திரும்பவும் மேலெழுவான். இழிந்தவன் வீழ்வது களிமண் உருண்டை போலும் (மீண்டும் எழமாட்டான்).

 

19.

விதிவசத்தால், ஒருவேளை, உலகில் தாமரைகள் அற்றுப்போனால், அன்னமும், சேவல் போன்று குப்பை மேட்டினைக் கிளறுமோ?

 

குப்பையைக் கிளறுமோ அங்ஙனம் நேராதென.

 

20.

நெற்றிப் பிளவுகளினின்றும் மதமொழுகும் களிறு, தூக்கக் கலக்கத்துடன், வாயிலில் நிற்க, தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் வாயிலில் கருவத்துடன் கனைத்து நிற்க, வீணை, குழல், மிருதங்கம், சங்கு மற்றும் மேளம் தூக்கத்தினின்றும் எழுப்ப - இத்தகைய தேவேந்திரனுக்கு நிகரான சிறப்புகள் யாவும் தருமத்தின் விளைவுகளே.

 

தருமத்தின் விளைவு – அறவழி நடப்பதனால்

 

21.

தாமரை மலருக்கு, சிவப்பு நிறம், நன்மக்களுக்கு, பிறர்க்குதவும் தன்மை, தீயோருக்கு, தயவின்மை, மூன்றினுக்கும், இம்மூன்றும் (முறையே) இயற்கையில் அமைந்தவையாம்.

 

22.

வாக்கிலே உண்மை மிக்குயர்ந்த அணிகலன். நாணமும், சிற்றிடையும் பெண்ணுக்கு அணிகலன். கல்வியும், பொறுமையும் அந்தணருக்கு அணிகலன். நற்பண்பே அனைத்து மக்களுக்கும் அணிகலன்.

 

23.

இனியவளே! கொடிய விதியெனும், திறமை வாய்ந்த குயவன், மனமெனும் களிமண்ணை, வலிதே உருண்டை செய்து, கவலையெனும் திகிரிகையிலிட்டு, விபத்தெனும் கழியினால் அடித்தடித்து, சுழற்றிக் கொண்டேயிருக்கின்றானே. விதி என்ன செய்யுமோ, அறிந்திலேனே!

 

என்ன செய்யுமோ – என்ன பாண்டம் செய்யுமோவென.

 

24.

ஏ முட்டாளே! மேன்மக்கள், இடுக்கண் நேர்கையில் தமது நெஞ்சுரத்தினை இழந்து விடுவார்களென்று எண்ணி நோக்குவாயாகில், அது வீணான செயல். அதனைக் கைவிடுவாய். ஊழிக் காலத்தில், புவியைத் தாங்கும் குலகிரியும், ஆழம்காண இயலா பெருங்கடலும் தங்கள் வரம்பை மீறுகின்றன. இவைகளைப் போன்று இழிந்ததல்ல மேன்மக்களின் நெஞ்சுரம்.

 

குலகிரி முதலான எட்டு மலைகள் புவியினைத் தாங்குவதாக கருதப்படுகின்றது.

 

25.

எங்ஙனம் கைதேர்ந்த, பழகிய அழகி, (தனது) வாள் நிகர், கூரிய நகக் கீரல்கள் பதிந்த, வீரனின் (காதலனின்) மார்பினை விரும்புவாளோ, அங்ஙனமே, வெற்றிமடந்தையும், கூரிய வாள் துளைத்த வீரனின் மார்பினையே விரும்புகின்றாள்.

    

வெற்றி மடந்தை – வீர லக்ஷ்மி அல்லது விஜய லக்ஷ்மி